கோடம்பாக்கத்தில் இருந்தபடியும் அற்புதங்கள் படைக்கலாம்!- பாலு மகேந்திரா

Eyestube
கோடம்பாக்கத்தில் இருந்தபடியும் அற்புதங்கள் படைக்கலாம்!- பாலு மகேந்திரா 11-bal10
சென்னை: திரைத் துறையில் எவ்வளவுதான் கற்றாலும் திரும்ப இந்த கோடம்பாக்கத்தில்தானே இறங்க வேண்டும் என யாரும் சலித்துக் கொள்ள வேண்டாம். இதே கோடம்பாக்கத்திலிருந்தபடி அற்புதங்கள் படைக்கலாம் என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.

பாரதி, ஆட்டோகிராப், குட்டி, மொழி போன்ற படங்களில் சின்னதும் பெரிதுமாக வேடங்கள் செய்துவந்த இவி கணேஷ் பாபு, முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யமுனா.
பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் படித்த சத்யா என்பவர் ஹீரோவாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரீரம்யா நடிக்கிறார். ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர் இவர்.

ஆடுகளம் நரேன், எங்கேயும் எப்போதும் வினோதினி, சாம்ஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு இலக்கியன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் புனைந்துள்ளார். பொ சிதம்பரம் ஒளிப்பதிவு செய்ய, லெனின் எடிட்டிங் செய்துள்ளார். காதல் கந்தாஸ், காயத்ரி ரகுராம் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற காவிரிக் கரை நகரங்களில் யமுனா படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அறிமுக விழா திங்கள்கிழமை மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, "நான் தஞ்சாவூரிலிருந்து வந்தவன். விவசாயக் குடும்பம். பல நாடகங்களை எழுதிய பின்னர், இயக்குநராகும் ஆசையில் கும்பகோணம் வந்தேன். அப்போது தென்பாண்டி சிங்கம் படம் எடுத்த இளையபாரதியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ஆனால் என் உருவத்தைப் பார்த்து நடிகனாக்கிவிட்டார்கள்.

பொதுவா, ஒரு இயக்குனர் நடிகராகுறப்போ அதை ஈஸியா எடுத்துக்குறாங்க. ஆனா ஒரு நடிகன் இயக்குனரானா நம்மளை நோக்கி வீசுறதுக்காக ஆயிரம் அம்புகளை கூர்தீட்டி காத்திருக்காங்க!
என்னை நடிகராக பார்த்தே பழக்கப்பட்டவர்கள் இயக்குனராகி விட்டேன் என்றதும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அதிர்ச்சியில் நீயெல்லாம் டைரக்டராகி? என்ற நக்கலும், படம் வந்ததும் உன் வண்டவாளம் தெரியத்தானே போகுது? என்ற குத்தலும் பொதிந்திருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது... அதை மனதில் வைத்து வெகு கவனமாக, ஜனரஞ்சகமாக, நான் யமுனாவை இயக்கியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் கதை வாழ்வின் அடிப்படை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்விஸ மருந்துதான் முக்கியம். இதற்காக அவன் மற்றவர்களைச் சார்ந்திருக்கும்போது, எதையும் செய்யத் தயாராக இருப்பான். அதைத் தெரிந்து கொண்டு, அவர்களை தங்கள் சுயநலத்துக்காக ஒரு கூட்டம் பயன்படுத்திக் கொள்கிறது... அதைப் பற்றியதுதான் இந்தப் படம்," என்றார்.

அடுத்து பேசிய பாலுமகேந்திரா, கோடம்பாக்கத்தில் தயாராகும் திரைக்கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நம்பிக்கை வார்த்தைகளைத் தந்தார்.

அவர் கூறுகையில், "இந்த விழாவுக்கு பாலுமகேந்திராவுக்கும் என்ன தொடர்பு...? இவன் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டான்.. என்ற கேள்வி உங்களுக்கு எழும். தொடர்பு இருக்கிறது!
நான் நடத்தி வரும் சினிமா பட்டறையில் பயின்ற சத்யா என்ற மாணவன்தான் இந்தப்படத்தின் அறிமுகநாயகன். இன்னும் இரு மாணவர்கள் இதன் உதவி இயக்குநர்கள். என் பள்ளியில் குரல் பயிற்சி தரும் வினோதினி நடிக்கிறார். அதனால்தான் வந்தேன்.

எனது பயிற்சிப் பள்ளியில் நான் படிக்க வைப்பதில்லை.. உடல் மொழியை எப்படி வெளிப்படுத்துவது, குரலை சூழலுக்கேற்ப எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றைத்தான் நாங்கள் கற்றுத் தருகிறோம். நடிப்பை கற்றுத் தரமுடியாது. காரணம் நடிப்பில் இத்தனை வகை என்றே அளவிட முடியாது. ஒருவனுக்கு நடிக்க வரும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அவனிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவது இயக்குநர் வேலை.
என்னதான் பயிற்சி எடுத்தாலும், பல விஷயங்களைப் பயின்றாலும் மீண்டும் இதே கோடம்பாக்கத்தில்தானே போய் இறங்க வேண்டும் என்று புதியவர்கள் சலிப்படைய வேண்டாம். காரணம் இதே கோடம்பாக்கத்திலிருந்துதான் ஒரு பராசக்தி வந்தது... பாசமலர் வந்தது, அழியாத கோலங்கள் வந்தது.

இந்த கோடம்பாக்கத்திலிருந்தபடி உலக சினிமா படைக்க முடியும்... அற்புதங்கள் படைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டால்போதும்," என்றார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!