'புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இளையராஜாவுக்காவே எழுதப்பட்டது!'

Eyestube
'புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இளையராஜாவுக்காவே எழுதப்பட்டது!' 27-spb10
டல்லஸ்(யு.எஸ்): எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி ஷைலஜா மற்றும் எஸ்.பி.பி சரணும் உடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட எஸ்.பி.பி 'தயவு செய்து ரஜினி, கமல், விஜயகாந்த் பாடல்கள் என்று பிரித்துப் பார்க்காமல் நான் பாடிய பாடல்களாக பாருங்கள். நாங்கள் முதலில் பாடிய பிறகுதான் அவர்கள் நடிக்கிறார்கள்.. அனைத்தையும் இங்கே பாடமுடியாது என்பதால் குறிப்பிட்ட 200 பாடல்களை தேர்வு செய்து, சென்னையில் நான்கு நாட்கள் குழுவினரோடு காலை முதல் மாலை வரை, பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம்.

திடிரென்று நீங்கள் வேறு ஏதாவது பாடல்களை கேட்டால், இசைக்குழுவினரால் சரியாக வாசிக்க முடியாமல் போகலாம். 40,000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். நிறைய பாடல்கள் எனக்கே மறந்திருக்கும். இன்று நாங்கள் பாடும் அனைத்து பாடல்களையும் ரசித்து ஒத்துழைப்பு தாருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக அவரை அறிமுகப்படுத்தும் போது 'பால்காரன் முதல் ரோபோ வரை எந்த வேடத்தில் நடித்தாலும் தனக்கு டைட்டில் சாங் பாட சூப்பர் ஸ்டார் ரஜினி அழைப்பது எஸ்.பி.பி யைத் தான்" என்றதும் எழுந்த ஆரவாரமான கைத்தட்டல்களை பார்த்து உஷாராகி விட்டார் போலும்.

இளையராஜாவுக்காக எழுதிய பாடல்

முதல் பாடலாக ‘மடை திறந்து' என்ற பாடலைத்தான் பாடினார் எஸ்.பி.பி.
'இந்தப் பாடலில் வரும் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே' என்ற வரிகளை, நான் பாடினாலும் அது இளையராஜாவுக்காகவே கவிஞர் வாலியால் எழுதப்பட்டது' என்று குறிப்பிட்டார்.

தமிழில் சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி' பாடல் மூலம் அறிமுகப்படுத்திய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அடுத்தடுத்து வித்தியாசமான வாய்ப்புகள் கொடுத்த இளையராஜாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

சித்ராவுக்காக ஹரிஹரன் குரலில் வெவ்வேறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தவர், திடீரென்று ‘ உயிரே உயிரே' என ஏ.ஆர்.ரஹ்மானின் பம்பாய் பட பாடலை பாட ஆரம்பித்த்தும், பார்வையாளர்கள் பிரமிப்புக்குள்ளாகினர். மேடையில் அமர்ந்திருந்த சித்ராவின் முகத்தில் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி என பலவிதமான உணர்வுகள். பாடலின் இடையே அவர் சேர்ந்து கொண்டு பாடி முடித்தார். ஹரிஹரன் பாடிய இந்த பாடலை சித்ராவுக்காக பாடியதாகவும், இந்த கச்சேரி டூரில், தனக்கும், சரணுக்கும் சித்ரா துணைக் குரல் எல்லாம் கொடுத்து ரொம்பவும் பரவசப்படுத்தி வருகிறார். அதனால், அவருக்கு முக்கியமான இந்த பாடலை, ஹரிஹரன் வரவில்லையென்றாலும் நானே பாடினேன். இது அவருக்கு முன்னதாக தெரியாது. மேடையில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினேன் என்றார் எஸ்.பி.பி.
மேலும், எனக்கு அவர் மகள் போல் என்றாலும், இசைப் புலமையில் அவர் ரொம்ப பெரியவர். அவரது இசை ஞானத்திற்கு முன்னால் நான் ஏதும் அறியாதவன் என்றும் குறிப்பிட்டார்.

இளைராஜாவைத் தந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு பாராட்டு

இளையராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சண்முகநாதனும், மகள் கீதாவும் (தமிழ் சங்க உப தலைவர்) டல்லஸில் வசிக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து, இந்த பாடல் பஞ்சு அருணாச்சலத்திற்கு நன்றி செலுத்துவதற்காக பாடுகிறேன் என்று ‘காதலின் தீபம் ஒன்று' பாடினார்.

இளையராஜா என்ற இசை மேதையை அறிமுகப்படுத்திய அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று புகழாரம் சூட்டினார்.

கம்பன் ஏமாந்தான், நீல வான ஓடையில் போன்ற பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முதல் இரண்டு வரிகளுடன் மெட்லியாக பாடி அசத்தினார்.

'ஆயிரம் நிலவே வா' வை கேட்க திரண்ட 1500 பேர்

ஆயிரத்து ஐநூறு பேர் கொண்ட ஆடிட்டோரியம் நிறைந்து, டிக்கெட் கிடைக்காமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். டல்லாஸில் தமிழ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு அதிகம் பேர் திரண்டது இது தான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைவர் கலைநாயகம், உப தலைவர் கீதா, செயலாளர் சுமதி, பொருளாளர் சுப்ரா, செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ரகு, ஜலீலா, தங்கவேல், ஆலோசகர் விஜிராஜன் மற்றும் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். எஸ்.பி.பி குழுவினரின் வருகையொட்டி, ஆடிட்டோரியத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

'மடை திறந்து' ஆரம்பித்த கச்சேரி 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற வேத வாக்காக நிறைவானது.
இதுவரை டாம்பா, ராலே, சான் ஓசே, டல்லஸ் நகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ள எஸ்.பி.பி குழுவினர், வாஷிங்டன் டிசி, சியாட்டில், போர்ட்லாண்ட், சான்டியாகோ, நியூ ஜெர்சி மற்றும் டொரோண்டாவில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அக்டோபர் 15 ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!