தாண்டவம் விவகாரம்... இயக்குநர் சங்கத்தின் முன் உதவி இயக்குநர்கள் போராட்டம்!

Eyestube
சென்னை: தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பான சர்ச்சையில் இயக்குநர் சங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஏராளமான துணை இயக்குநர்கள் இன்று சங்கத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தாண்டவம் பட விவகாரம் இயக்குநர் சங்கத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.
இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குநர் பொன்னுசாமி. ஆனால் படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் பொன்னுசாமிக்கு ஆதரவாக உதவி இயக்குநர்கள் களமிறங்கியுள்ளனர்.
மேலும் பொன்னுசாமிக்கு நீதி கிடைக்கச் செய்வதை விட்டுவிட்டு, தாண்டவம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சாதகமாக சங்கத்தின் முதல் நிலை நிர்வாகிகள் அமீர், கரு பழனியப்பன் போன்றவர்கள் செயல்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன்னுசாமிக்கு ஆதரவாக ஜெகதீசன், ஐந்துகோவிலான், பாலமுரளிவர்மன், வி.சி.விஜயசங்கர், விருமாண்டி என்கிற கமலக்கண்ணன், நாகேந்திரன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். சங்க இணைச் செயலரான தம்பிதுரையும் ராஜினாமா செய்தார்.

இவர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் பதவி விலகிவிட்டார்.

தங்கள் ராஜினாமா குறித்து பாலமுரளி வர்மன் கூறுகையில், "இந்த இயக்குநர் சங்கம் உருவானதே உதவி இயக்குநர்களுக்காகத்தான். ஆனால் இன்று பொன்னுசாமி என்ற உதவி இயக்குநரே இந்த சங்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே சங்கத்தில் புகார் பதிவு செய்தார் பொன்னுசாமி. அப்போதே, பொன்னுசாமியின் திரைக்கதையையும் விஜய்யின் திரைக்கதையையும் சங்த்தின் 7 பேர் கொண்ட குழு ஒப்பிட்டுப் பார்த்தது. உண்மையில் நாங்கள் கேட்ட பிறகே, விஜய் அந்த திரைக்கதையை தயார் செய்திருந்தார். இரு திரைக்கதைகளும் ஒரே மாதிரிதான் இருந்தன. பின்னர் படத்தையும் பார்த்தோம். படத்திலும் பொன்னுசாமியின் திரைக்கதையைத்தான் அப்பட்டமாக எடுத்தாண்டிருந்தனர்.
இந்தப் படத்தின் கதை அல்லது திரைக்கதைக்கு பொன்னுசாமி பெயரைப் போட வேண்டும் என்பதுதான் வைக்கப்பட்ட கோரிக்கை.

ஆனால் அதை யுடிவி ஒப்புக் கொள்ளவில்லை. மற்ற மொழிகளில் பிரச்சினை வரும் என்றார்கள். இதைத் தவிர்த்து வேறு எந்த திட்டத்துக்கும் பொன்னுசாமி சம்மதிக்காததால்தான் விஷயம் கோர்ட்டுக்குப் போனது. ஆனால் இந்த விசாரணையை வேண்டுமென்றே இயக்குநர் சங்கம் காலம் தாழ்த்தியது. குறிப்பாக ஜனநாதன், கரு பழனியப்பன், அமீர் போன்றவர்கள். அப்போதுதான் படத்துக்கு பொன்னுசாமியால் தடை வாங்க முடியாது என்று தெரிந்து காலம் தாழ்த்தினர்.

அவர்களின் இந்த ஒரு சார்பான நிலையைக் கண்டித்துதான் நாங்கள் ராஜினாமா செய்தோம். இன்று போராட்டம் நடத்தினோம். இந்த வழக்கையும் விடப் போவதில்லை.

இன்று அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏதோ நாங்கள் லெட்டர் பேடை திருடி பொன்னுசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்ததாக பொய் கூறி வருகிறார். நாங்களும் சங்க நிர்வாகிகள்தான். அந்த லெட்டர் பேடில் எங்கள் பெயரும் உள்ளது. அந்த வகையில் லெட்டர் பேடை பயன்படுத்த எல்லா உரிமையும் எங்களுக்கு உள்ளது. இருந்தாலும், அவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அந்தக் கடிதத்தை தயாரித்து நீதிமன்றத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எங்களை தவறாக சித்தரித்து அமீர் பேசி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

உதவி இயக்குநர்கள் முற்றுகை

இன்று மாலை சென்னையில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகம் முன் குவிந்த ஏராளமான உதவி இயக்குநர்கள், சக உறுப்பினரான பொன்னுசாமிக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர். சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இயக்குநர் சங்கம் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டுள்ள இந்த சூழலில், சங்கத்தின் தலைவராக உள்ள பாரதிராஜா, எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!