ராஜாவின் இசையை ரசிப்பதைத் தவிர வேறென்ன வேண்டும்?

Eyestube
ராஜாவின் இசையை ரசிப்பதைத் தவிர வேறென்ன வேண்டும்? 27-ila10
ஞாயிறு மதியம் உணவருந்தும் நேரத்தில் ரிலாக்ஸ் ஆக ஏதாவது பார்க்கலாமே என்று டிவியை போட்டதில் உணவின் ருசியை விட சுவையான நிகழ்ச்சியை காண நேரிட்டது. அது ஜெயாடிவியில் ராஜா தனது இசை ராஜாங்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி என்னவோ மறு ஒளிபரப்புதான் என்றாலும் ராஜாவின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அல்லவா. உணவு உண்பதைக் கூட மறந்து இசையில் லயித்து விட்டோம்.

என்றென்றும் அவர் இசைக்கு ராஜா என்பதை நிரூபித்த கச்சேரி இது. இதில் எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே பூவே செம்பூவே பாடல் பலமுறை ரசிகர்களுக்குப் போய் சேர்ந்தது. ராஜா ரசிகர்களின் மனக்குவியல்களில் இந்த பாடல் ஒரு முத்து. இரண்டாம் இடையிசை மின் கிதாருடன் துவங்குகையிலேயே ரசிகர்களின் ஆராவாரமும் துவங்குகிறது.

அந்த இடையிசையில் வயலின் குழு சேர்கையில் அந்தப் பரவசம் தரும் இன்பத்தை அத்தனை பேரும் மெய்மறந்து அனுபவித்தனர். ஆனால் இடையிசை முடியும் முன்னரே ஜேசுதாஸ் பாடத்துவங்க, வேலையில் கவனமாக இருந்த நடத்துநர் என்ன செய்வதென புரியாமல் ஜேசுதாஸைப் பார்த்தபடியே இசைக்கோர்வையை தொடர எல்லாம் குளருபடியானது. ஆனாலும் இசைஞர்கள் ஜேசுதாஸை மொத்தமாக கைவிடாமல் அவர் பாடும் வரிகளுக்கேற்ற தாளத்துடன் இணைய, நுழைகிறார் ராஜா. இது என் ஷோ. இப்படியிருக்க கூடாது என ஜேசுதாஸை நிறுத்தினார்.

ஜேசுதாஸ் வாழ்நாளில் இவ்வளவு பேர் முன்னிலையில் தாளத்துக்கு தவறி மீண்டும் துவங்கியது இது எத்தனையாவது முறையாக இருக்க முடியும்? ராஜா என்ன சொல்லி நிறுத்தினாரோ... ரிக்கார்டிங்கென்று ஜேசுதாஸ் மைக்கில் சொல்ல... மறுபடியும்... இங்கு ஜனங்களின் ஆராவாரம். இது ராஜாவுக்கு. தங்களுக்குத் தேவையானதை தெளிவாக தரும் அவர்களுடைய ராஜாவிற்கு ரசிகர்கள் கைத்தட்டலை பரிசாகத் தந்தனர்.

இரண்டாம் முறையும் ஜேசுதாஸ் சொதப்ப, ராஜா இந்த முறை வெறும் கையசைவில் அவரை நிறுத்தி இசைஞர்களுக்கு பாதை காட்டுகிறார். முதல் முறை ஜேசுதாஸைக் காப்பாற்றியவர்களை இந்த முறை ராஜா காப்பாற்றுகிறார். பின்னர் ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க ராஜாவின் முகத்தில் வரும் அந்த நிம்மதி ஆள்காட்டி விரலுடன் அவர் உதிர்க்கும் அந்த புன்னகையில் தெரிந்தது.

பாடல் என்பது வெறும் மனிதர்களின் குரல் அல்ல அது இசையுடன் கூடிய ஒருவித பிணைப்பு. ராஜாவின் பாடல்களில் அநேக பாடல்களில் நிறைவுப் பகுதி அருமையானதாக இருக்கும்.. இந்த நிகழ்விலும், குற்றவுணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த ஜேசுதாஸ் பூவேவேஏஏஏஏ க்குப் பின் எனக்காக இன்னொரு வாட்டி பார்க்கலாமா என கேட்கிறார். ராஜாவுக்கும் அப்பொழுது தான் தோன்றுகிறது பாடல் இன்னும் முடியவில்லையென்று. மக்களுக்கும் தெளிவாக்குகிறார். பாட்டு இன்னும் முடியலை அதுக்குள்ள கை தட்டுறீங்களே என்று கேட்க ரசிகர்களின் ஆராவாரம் மெதுவாக அடங்குகிறது.

முடிவு சரி இல்லாமல் எப்படி? ஜேசுதாஸ் பெரிய ஆளுமை. குற்றவுணர்ச்சியுடன் வீடு செல்ல முடியுமா. திருத்திக்கொள்கிறார்.

நடத்துநர் அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்க ராஜா தானே இசைஞர்களை வழிநடத்த... பதறியபடியே அவர் புத்தகத்தை வைத்துவிட்டு அதே பாடலுக்கான தன் வேலைக்கு மீண்டும் திரும்ப ராஜாவுக்கு சந்தோஷம். கூட்டத்துக்கு தேவையான ஒன்ஸ்மோர்கள் இப்படியாக போய் சேர்கின்றதே என்கிற உற்சாகத்துடன் ராஜா. இந்த முறை ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க கூட்டத்தில் பலத்த கைதட்டல். அது இசைக்கு அவர்களின் வரவேற்பு, ஜேசுதாஸ் ராஜா எல்லோருக்குமான வாழ்த்து.

நான் செய்த பாவம் என்னோடு போகும் என ஜேசுதாஸ் தன்னை தானே சொல்லிக் கொண்டு தன் பக்கம் விரலைக் காட்டுவதைப் பார்த்த ராஜா கையெடுத்து ஜேசுதாஸை வணங்குவது கலையைத் தாண்டி மனிதத்துக்கான பாடம். அது தரும் நெகிழ்வு அலாதியானது. புல்லாங்குழலும் அதே அமைதிக்கு எல்லாவற்றையும் திருப்ப... ஜேசுதாஸ் முடிக்கிறார்.

இந்த இசைக்கச்சேரி விருந்தினை உண்டபின்பு மதிய உணவாவது ஒன்றாவது. அதுதான் செவிக்கு பலமான விருந்து கிடைத்து மனதும் வயிறும் முழுதாக நிறைந்து விட்டதே. ராஜா இருக்கும் காலத்தில் இசையை ரசனையுடன் கேட்பதைத் தவிர வேறென்ன வேண்டும் இந்த உலகத்தில்?.


_________________
Eyestube | Publish Yourself
EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!